பகீர்... நூடுல்ஸ் பார்சலுக்குள் உயிருடன் துடித்த எலிக்குட்டி!
சீனாவின் ஹாங்காங் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய நூடுல்ஸ் பார்சலுக்குள் பச்சிளம் எலிக்குட்டி ஒன்று உயிருடன் துடித்துக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உலக அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.
ஹாங்காங்கைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்கம் போல் அப்பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நூடுல்ஸ் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்சலைப் பிரித்துச் சாப்பிடும்போது, நூடுல்ஸுக்குள் ஏதோ அசைவது கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் சென்று உற்றுப் பார்த்தபோது, அங்கே புதிதாகப் பிறந்த பச்சிளம் எலிக்குட்டி ஒன்று உயிருடன் துடித்துக்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. உணவகங்களின் சுகாதாரமற்ற முறையைக் கண்டு உறைந்துபோன அந்தப் பெண், உடனடியாக இதுகுறித்து அந்நாட்டின் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் முறைப்படி புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, ஹாங்காங் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் உடனடியாகத் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். உணவு தயாரிக்கும் இடங்கள் மற்றும் சமையலறையில் உரிய சுகாதார விதிகள் பின்பற்றப்படாமல் இருந்ததும், எலிகள் மற்றும் பூச்சிகள் நடமாட்டம் தாராளமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட அந்த உணவகத்தின் மீது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் மீண்டும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.