undefined

பகீர்... வேலை தேடும் இளம்பெண்களை விபாச்சாரத்தில் ஈடுபடுத்திய சகோதரிகள்!

 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், வேலை தேடும் ஏழைப் பெண்களைக் குறிவைத்து அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரு சகோதரிகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம், அப்பாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த அம்ரின் மற்றும் அப்ரின் என்ற இரு சகோதரிகளும், அவர்களின் உதவியாளர் சந்தன் யாதவ் என்பவருமாக மூன்று பேரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பின்னணியில் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய இளம்பெண்களுக்கு இலவச தங்குமிடம், உணவு மற்றும் மாதம் ₹10,000 சம்பளம் தருவதாகக் கூறி இந்தச் சகோதரிகள் வேலைக்குத் தேர்வு செய்துள்ளனர். வேலைக்கு வந்த பெண்களை மது மற்றும் 'எம்டி' போன்ற போதைப் பொருட்களைக் கொடுத்துச் சுயநினைவற்ற நிலைக்கு ஆளாக்கி, செல்வந்தர்களுடன் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதுடன், அவர்களைக் கட்டாய மதமாற்றமும் செய்துள்ளனர். இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அம்ரின் மற்றும் அப்ரின் சகோதரிகள் மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 21 மற்றும் 32 வயதுடைய இரு பெண்கள் தப்பிச் சென்று 'பாக் செவானியா' காவல் நிலையத்தில் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு பெண், அகமதாபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வன்கொடுமைக்கு ஆளானதும் தெரிய வந்துள்ளது.

பெண்களைச் சட்டவிரோதத் தொழிலில் ஈடுபடுத்தி கிடைத்த பணத்தில் இந்தச் சகோதரிகள் மிகவும் சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர். கைதானவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோது, பல இளம்பெண்களின் புகைப்படங்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் குஜராத் மற்றும் மும்பை போன்ற இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதால், இதில் ஒரு மாநிலம் கடந்த கும்பல் இருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பிலால், சானு மற்றும் யாசிர் ஆகிய மூவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வேலை தேடும் பெண்கள் இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.