பகீர்... நாடு முழுவதும் பதற்றம்... 2.3 கோடி லிட்டர் பால் டிடர்ஜென்ட் கலந்து கலப்படம் - 7 பேர் மீது வழக்குப்பதிவு!

 

மராட்டிய மாநிலத்தில் டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் ஆபத்தான ரசாயனங்களைக் கலந்து தயாரிக்கப்பட்ட சுமார் 2.3 கோடி லிட்டர் கலப்படப் பால் சந்தையில் விற்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரிக்கச் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம், தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் இந்த விபரீத மோசடி அரங்கேறியுள்ளது. அங்குள்ள பண்ணையில் அசல் பாலுக்குப் பதிலாக, குறைந்த தரம் கொண்ட மில்க் பவுடர், ரசாயன பவுடர், பாமாயில், டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சில ஆபத்தான ரசாயனங்களை ஒன்றாகக் கலந்து 'செயற்கை பால்'  தயாரித்துள்ளனர்.

இவ்வாறாக அவர்கள் சுமார் 23 லட்சம் லிட்டர் செயற்கை பாலைத் தனியாகத் தயாரித்துள்ளனர். பின்னர், கடந்த 6 மாதங்களாக இந்தச் செயற்கை பாலை அசல் பாலுடன் கலந்து, ஒட்டுமொத்தமாக 2.3 கோடி லிட்டர் கலப்படப் பாலாக மாற்றிச் சந்தையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து லாபம் பார்த்துள்ளனர்.

இந்த நச்சுப் பால் விற்பனை குறித்துப் போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், உணவு மற்றும் மருந்து நிர்வாக திகாரிகள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பால் பண்ணைக்குச் சென்று அதிரடி ஆய்வு நடத்தினர். அங்குப் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில், இந்த மோசடியில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக விசாரிக்க மராட்டிய அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. பால் பண்ணையில் கலப்படத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆபத்தான ரசாயனப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் யூரியா போன்ற ரசாயனங்கள் கலந்த இந்த நச்சுப் பாலைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "இத்தகைய செயற்கை மற்றும் கலப்படப் பாலைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் மனிதர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். நாளடைவில் இது உயிருக்கே ஆபத்தான விளைவுகளைக் கூட ஏற்படுத்தும்."

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பாலில், இவ்வளவு பெரிய அளவில் நச்சு ரசாயனங்கள் கலந்து விற்கப்பட்ட சம்பவம் மராட்டியம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.