பகீர்... ஓடுபாதையை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்த விமானம்.. 190 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
இங்கிலாந்தில் 'போலோ' புயல் வீசி வரும் நிலையில், பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கிய பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து புறப்பட்ட 'ஜெட்2' நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம், இங்கிலாந்தின் பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்பகுதியில் 'போலோ' புயல் காரணமாக வீசிய அசுரக் காற்றில் சிக்கிய 70 டன் எடை கொண்ட அந்த விமானம், தரையிறங்கிய நொடியில் நிலைதடுமாறியது.
விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் இருந்து நழுவி அருகிலிருந்த புல்வெளிக்குள் பாய்ந்த போதிலும், விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினர். இந்த சம்பவத்தில் விமானத்திலிருந்த 190 பயணிகளும் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானம் நிலைதடுமாறி புல்வெளியில் பாய்ந்த இந்த பரபரப்பான திக்... திக்... காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.