நேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு...  பிரதமர் மோடி வாழ்த்து!

 

நேபாளத்தில் நிலவி வந்த அரசியல் மாற்றங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அந்நாட்டின் 47-வது பிரதமராகப் பாலேந்திர ஷா (35) இன்று பதவியேற்றுள்ளார். இதன் மூலம் நேபாள வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி அமோக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அவர் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.

காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அதிபர் ராம்சந்திர பௌடல் (Ramchandra Paudel) பாலேந்திர ஷாவிற்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இன்று மதியம் சரியாக 12:34 மணிக்கு (உள்ளூர் நேரம்) இந்த விழா நடைபெற்றது. இந்து மற்றும் பௌத்த மத சடங்குகளுடன், 108 பிராமணர்களின் வேத மந்திரங்கள் மற்றும் பௌத்த துறவிகளின் பிரார்த்தனைகளுக்கு இடையே அவர் பதவியேற்றார்.

எப்போதும் தனது பிரத்யேக கருப்பு கண்ணாடியுடன் காணப்படும் பாலேந்திர ஷா, இன்றும் அதே ஸ்டைலில் பாரம்பரிய நேபாள உடையில் வந்து பதவியேற்றார்.

அரசியலுக்கு வரும் முன் ஒரு புகழ்பெற்ற ராப் பாடகராகவும், சிவில் இன்ஜினியராகவும் இருந்தவர் 'பாலென்' என்று அழைக்கப்படும் பாலேந்திர ஷா. மார்ச் 5-இல் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 275 இடங்களில் இவரது கட்சி 182 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது. முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலியை, அவரது சொந்தத் தொகுதியிலேயே பாலேந்திர ஷா தோற்கடித்தது ஆசிய அரசியல் களத்தையே உலுக்கியது.

நேபாளத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள பாலேந்திர ஷாவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். "உங்களது தலைமை நேபாள மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது; இந்தியா-நேபாள உறவை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல உங்களுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்" என அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.