மதுபான மொத்த விற்பனைக்குத் தடை.. ரசீது கட்டாயம் - மீறினால் கடை உரிமம் ரத்து - புதுச்சேரியில் கலால்துறை அதிரடி! 

 

புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோதப் பதுக்கலைத் தவிர்க்கவும் கலால்துறை துணை ஆணையர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

மதுபானக் கடைகளில் தனிநபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ மொத்தமாக மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. ஒவ்வொரு மதுபான விற்பனைக்கும் வாடிக்கையாளர்களுக்குக் கண்டிப்பாக ரசீது வழங்கப்பட வேண்டும். ரசீது இல்லாமல் மது விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும்.

மதுபானக் கடைகளில் உள்ள கையிருப்பு மற்றும் அன்றாட விற்பனை விபரங்களைக் கலால்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வர். இதில் ஏதேனும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறிச் செயல்படும் மதுபானக் கடைகளின் உரிமம் (License) உடனடியாக ரத்து செய்யப்படும் என்று கலால்துறை எச்சரித்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக மதுபானத்தைப் பதுக்கி வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களைக் கவர்வதற்காக அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மதுபானங்களை மொத்தமாக வாங்கிப் பதுக்கி வைப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் பொருட்டே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் மதுபான மொத்த விற்பனைக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.