வணிக நிறுவனங்களில் 1,000 குவிண்டாலுக்கு மேல் சர்க்கரை இருப்பு வைக்க தடை!

 

 

வணிக நிறுவனங்களில் சர்க்கரை இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை 2,000 குவிண்டாலில் இருந்து 1,000 குவிண்டாலாக குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் சர்க்கரை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு மற்றும் கால அளவைக் குறைத்து மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசிதழில் மறுபதிப்பு செய்துள்ளது.

அதன்படி, சர்க்கரை வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்யும் சர்க்கரையை அதிகபட்சம் 15 நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைத்திருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த கால அவகாசம் 30 நாட்களாக இருந்தது.

அதேபோல், வணிகர்கள் எந்தவொரு இடத்திலும் அதிகபட்சம் 1,000 குவிண்டால் சர்க்கரை மட்டுமே இருப்பு வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த உச்சவரம்பு 2,000 குவிண்டாலாக இருந்தது.

சர்க்கரை விநியோகத்தை முறைப்படுத்தவும், வணிக நிறுவனங்களில் சர்க்கரை பதுக்கப்படுவதைத் தடுக்கவும் இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.