மதுபானக் கடை பில் தொகையை கொடுக்க முடியல... இளம்பெண்ணின் தலையை மொட்டை அடித்த நிர்வாகம்... அதிர்ச்சி வீடியோ!
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபானக் கடை ஒன்றில், லட்சக்கணக்கில் பில் தொகையைச் செலுத்தாமல் ஏமாற்ற முயன்ற 18 வயது இளம்பெண்ணின் தலை மொட்டையடிக்கப்பட்ட விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாங்காக்கின் பிங்க்லாவ் பகுதியில் இயங்கி வரும் பிரபல ஹோஸ்ட் பார் ஒன்றிற்குச் சென்ற அந்தப் பெண், தனது வயதை மறைக்கப் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியுள்ளார்.
கடைக்குள் நுழைந்த அந்தப் பெண் அங்கு பணிபுரியும் ஆண் ஊழியர்களிடம் அடுத்தடுத்து சுமார் 200 மதுபானங்களை ஆர்டர் செய்து குடித்துள்ளார். இதனால் பில் தொகை 60,000 தாய் பாட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1.5 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், பில் தொகையைச் செலுத்த வேண்டிய நேரத்தில் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
உடனே அவரை மடக்கிப் பிடித்த பார் ஊழியர்கள் பணத்தைப் பெற அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முயன்ற போதிலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாரின் பொது மேலாளர், காவல்துறையிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அந்தப் பெண்ணிடம் விசித்திரமான ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுத் தலைமுடியை மொட்டையடிக்கச் செய்துள்ளார்.