வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா கட்சியின் 7 முக்கிய தலைவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு!

 

வங்காளதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது வன்முறையை ஏவிவிட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 முக்கியத் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு அரசு வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தில், ஷேக் ஹசீனா அரசின் அடக்குமுறையால் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்த மக்கள் கொந்தளிப்பால் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் கீழ் செயல்படும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடந்து வந்த வழக்கில், நீதிபதி முகமது நஸ்ருல் இஸ்லாம் சவுத்ரி தலைமையிலான அமர்வு நேற்று இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மந்திரியுமான ஓபைதுல் காதர், இணைப் பொதுச்செயலாளர் பஹாதுதீன் நசீம், முன்னாள் செய்தித்துறை மந்திரி முகமது அலி அராபத் உள்ளிட்ட 7 முக்கியத் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க ரகசியக் கூட்டங்களை நடத்தியதும், ஊடகங்களை முடக்க முயன்றதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள இந்த 7 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை சர்வதேச அரங்கிலும், வங்காளதேச அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.