“மகளைக் கொன்றுவிட்டேன்”... நள்ளிரவில் மாமனாரை கதறவிட்ட மருமகன்!
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில், மனைவியைக் கொலை செய்துவிட்டதாக மாமனாருக்குத் தொலைபேசியில் தெரிவித்துவிட்டு வீட்டைப் பூட்டிச் சென்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார், பெண்ணின் உடலை மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாராபங்கி நகரின் ரசூல்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சீமா (30). இவருக்கும் சந்தீப் என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த சந்தீப்புக்கும், சீமாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மாமனார் தர்மேஷைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்தீப், சீமாவைக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மறுநாள் வீட்டிற்கு வந்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சீமாவின் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது. தலைமறைவான சந்தீப்பைத் தேடி வரும் போலீசார், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்