இயக்குநர் பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு... முதலமைச்சர் உத்தரவு!
தமிழ் திரையுலகில் கிராமத்து கதைகளை எதார்த்தமாகப் பதிவு செய்து புகழ்பெற்ற மூத்த இயக்குநர் பாரதிராஜா, 84 வயதில் இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். திரையுலகிற்கு அவர் ஆற்றியுள்ள அரிய பங்களிப்பினைப் போற்றும் வகையில், அவரது இறுதிப்பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் இன்று காலையிலேயே நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு என பல்வேறு தரப்பினரும் தங்களது சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் அவரது சொந்த ஊரில் உள்ள முக்கியத் திரைப்பிரபலங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் திரண்டு வந்து பாரதிராஜாவின் உடலுக்குத் தொடர்ந்து தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவை என்பதால், திரையுலகினர் பலரும் அவரது நினைவுகளைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.