எங்கள் மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா... பாரதிராஜா மறைவுக்கு வைரமுத்து கண்ணீர் மல்க நேரில் அஞ்சலி! 

 

 

தமிழ் திரையுலகில் மண்வாசனை மிக்க எதார்த்தமான காவியங்களை படைத்து சாதனை படைத்த மூத்த இயக்குநர் பாரதிராஜா, 84 வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று ஜூன் 10 அன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் மூழ்கியுள்ளனர். இந்தத் துயரச் செய்தியை அறிந்ததும் கவிப்பேரரசு வைரமுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு உடனடியாக விரைந்து சென்றார்.

அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தனது ஆருயிர் நண்பரான இயக்குநர் பாரதிராஜாவின் உடலைப் பார்த்ததும் கவிப்பேரரசு வைரமுத்து நிலைதடுமாறி கதறி அழுது தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். திரையுலகில் தங்களுக்குள் இருந்த பல ஆண்டுகால கலைப் பயணத்தையும், ஆழமான நட்புணர்வையும் நினைவுகூர்ந்து அவர் கண்ணீர் வடித்த காட்சி அங்கிருந்தோரை நெகிழச் செய்தது. பாரதிராஜாவின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து வைரமுத்து தங்களது ஆறுதலையும், பெரும் வேதனையையும் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்தப் பதிவில், பிதாமகனே போய்விட்டாயா, கிராமத்து ராஜாவே இறந்துபட்டாயா, எங்கள் மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா என அவர் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். தமிழ் மொழி மற்றும் சினிமாவின் அடையாளமாக விளங்கிய ஒரு மாபெரும் கலைப்படைப்பாளியின் மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்பு எனத் திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.