குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை.. பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு!

 

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கோவை, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. அதற்கேற்ப, குற்றால மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த இரு அருவிகளிலும் மக்கள் இறங்காதவாறு வனத்துறையினரும், காவல் துறையினரும் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளையில், குற்றாலத்தில் உள்ள 'புலியருவி'யில் நீர்வரத்து சீராக உள்ளதால், அங்குச் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் ஐந்தருவிக்கு வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் புலியருவியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

மறுபுறம், குற்றாலத்தின் பிரதான அருவியான 'மெயின் அருவி' பகுதியில் தற்போது சில முக்கியக் கட்டுமானப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, அங்குக் குளிப்பதற்கான தடை ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், அது தற்போதும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், அருவிகளில் நீர்வரத்து சீரான பின்னரே மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.