undefined

காணும் பொங்கலுக்கு மெரினாவில் குளிக்க தடை...  குழந்தைகளுக்கு அடையாள அட்டை அதிரடி ஏற்பாடுகள்!

 

பொங்கல் பண்டிகையின் சிகரமான ‘காணும் பொங்கல்’ அன்று சென்னையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம். குறிப்பாக மெரினா கடற்கரையில் கூடும் கூட்டத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சென்னை மாநகர காவல்துறை பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு விதிமுறைகளையும் இன்று அறிவித்துள்ளது.

காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் கடலில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அலைகளின் சீற்றம் மற்றும் கூட்ட நெரிசலில் கடலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். தடையை மீறி கடலில் இறங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரை போன்ற நெரிசலான இடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தவறவிடுவது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனைத் தடுக்க இந்த ஆண்டு ஒரு புதிய முயற்சியை காவல்துறை மேற்கொள்கிறது. கடற்கரைக்கு வரும் குழந்தைகளின் கைகளில் அல்லது சட்டையில் அவர்களின் பெயர், பெற்றோரின் செல்போன் எண் மற்றும் முகவரி அடங்கிய அடையாள அட்டை (ID Tag) கட்டப்படும். இதன் மூலம் ஒருவேளை குழந்தை கூட்டத்தில் தொலைந்து போனாலும், உடனடியாகப் பெற்றோரைத் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், சமூக விரோத செயல்களைத் தடுக்கவும் கடற்கரை வான்பரப்பில் அதிநவீன ட்ரோன்கள் பறக்கவிடப்பட உள்ளன. இது தவிர, அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்காக 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடற்கரை நெடுகிலும் தயார் நிலையில் நிறுத்தப்படும். கடலில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உயிர் காக்கும் வீரர்களும் பணியில் இருப்பார்கள்.

மெரினா மட்டுமின்றி எலியட்ஸ் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்புப் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட உள்ளன. பொதுமக்கள் காவல்துறையினரின் இந்த விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு வளையத்தை மீற வேண்டாம் என்றும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.