இப்பவாச்சும் மழை வருமா? தமிழகத்தை ஏமாற்றிய 3 புயல்கள்... வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தெற்கு அல்லது தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு சில நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதன் மூலம் தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் இதுவரை உருவான 3 புயல்கள் ஆந்திரா நோக்கிச் சென்று தமிழகத்தை ஏமாற்றிய நிலையில், தற்போது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறுமா என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இதுவரை பற்றாக்குறையாகவே பதிவாகியுள்ளது. இதற்கிடையே கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளையும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது