அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடரிலிருந்து நிதிஷ் குமார் விலகல் - மாற்று வீரரை அறிவித்தது பிசிசிஐ!

 

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காயம் காரணமாக இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இத்தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அயர்லாந்து தொடர் மட்டுமின்றி, அதனைத் தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, அவருக்கு இடது தொடைப் பகுதியில்  காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒரு மாத காலம் தீவிரப் புனர்வாழ்வுப் பயிற்சியில் ஈடுபட உள்ளார். நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பதைப் பிசிசிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த 23 வயதான இளம் ஆல்ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்ஜ்  இந்திய அணியில் மாற்று வீரராக முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யான்ஷ் ஷெட்ஜ், 7 போட்டிகளில் 175.55 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 158 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். மேலும், இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்புத் தொடரிலும், சையத் முஷ்டாக் அலி உள்நாட்டுத் தொடரிலும் மும்பை அணிக்காகக் கீழ்-வரிசையில் இறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இவருக்கு இந்த இந்திய அணி வாய்ப்பு கிடைத்துள்ளது.ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியின் முதல் குழு நேற்று சென்னையிலிருந்து அயர்லாந்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. காயம் காரணமாக ஏற்கனவே சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விலகியிருந்த நிலையில், தற்போது நிதிஷ் குமார் ரெட்டியும் விலகியுள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி, பிரசித் கிருஷ்ணா, சூர்யான்ஷ் ஷெட்ஜ்.