உஷார்... ரூ.1 கோடி அபராதம்; 2 வருட சிறை... இனி விமான நிலையங்கள் அருகே இதெல்லாம் செய்தால் கடும் நடவடிக்கை!

 

விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விமான நிலையச் சுற்றுப்புறங்களில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும் 220 அம்சங்கள் அடங்கிய புதிய சட்ட விதிகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துப் பழைய 1937-ஆம் ஆண்டு விதிகளுக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘பாரதிய வாயுயான் விதிகள் 2026, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. விதிகளை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

விமானிகள் விமானத்தைத் தரையிறக்கும் போதும், புறப்படும் போதும் அவர்களின் கவனத்தைச் சிதறடித்து விபத்துகளை ஏற்படுத்தும் வகையில், விமான நிலையங்களிலிருந்து 18 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் ‘லேசர்’ ஒளிக்கதிர் வீச்சுகளைப் பாய்ச்ச முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களைச் சுற்றி 9 கிலோமீட்டர் தொலைவிற்குள், விமானிகளுக்குப் பார்வைக் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகப் பிரகாசமான விளக்குகளை அமைக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள் மீது பறவைகள் மோதி விபத்து ஏற்படுவதைத் தடுக்க, விமான நிலையச் சுற்றுச்சுவரிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் திறந்தவெளியில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டுவது மற்றும் பறவைகளை ஈர்க்கும் செயல்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் ஒளி அடிப்பது மற்றும் குப்பை கொட்டுவதால் பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதனைத் தடுக்க, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 10 நிலைகளில் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதன்படி அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது எந்தவிதப் பாரபட்சமுமின்றி உச்சபட்ச அபராதம் விதிக்கவும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.