குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் கரடிகள்... கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!

 

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் அகஸ்தியர் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாகக் கரடிகளின் நடமாட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது. சுமார் 15-க்கும் மேற்பட்ட கரடிகள் இப்பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தடையின்றிச் சுற்றி வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் கரடிகள் ஊடுருவுவதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டாணா காளிபார்விளை பகுதியில் கரடிகள் ஜோடியாகவும், தனித்தனியாகவும் தெருக்களில் உலா வந்தன. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருவதால், மலையடிவாரப் பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. கரடிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, வனத்துறையினர் உடனடியாகக் கூண்டுகள் வைத்து இந்தக் கரடிகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே வராதபடி மலையடிவாரப் பகுதிகளில் உரியத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.