“ஊழலை ஒழிக்க நான் எடுத்த முயற்சியால் திமுக பேஸ்மென்ட் ஆடிப்போய் கிடக்கிறது” - முதல்வர் விஜய்

 

ஊழலைக் கட்டுப்படுத்தத் தான் எடுத்து வரும் நடவடிக்கைகளால் சிலருக்கு ‘பேஸ்மென்ட்’ ஆடிப்போய் கிடக்கிறது எனத் தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். த.வெ.க. கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் நூலகத் திட்டங்களில் ஊழல்கள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டினார்.

கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், “பள்ளிக்கல்வித் துறையை ஊழல் துறையாக திமுக மாற்றியுள்ளது. பள்ளிகளுக்கு அனுமதி தருவதில் பெரிய ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிடமும் ரூ.40 லட்சம் வாங்கி உள்ளனர். பள்ளிகளின் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்; அனைவரும் சிக்குவார்கள். கல்வித் துறையிலேயே ஊழல் நடக்கிறது என்றால் அதை எப்படிப் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

“ஏ.ஐ. பயன்படுத்தி வளர்ச்சி இருக்கும் என்று பார்த்தால், ஊழல்தான் நடக்கிறது. கோவை பெரியார் அறிவுலகில் முறைகேடு நடந்திருப்பது வெளியே வருகிறது. மற்ற நூலகங்களில் என்ன நடந்திருக்கிறதோ, ஒவ்வொன்றாக வரும். இதெல்லாம் அறிவுலகமா? ஊழல் உலகமா?” என்றும் அவர் காட்டமாக விமர்சித்தார்.

“ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பசங்களின் எதிர்காலத்திற்காக அரசியலுக்கு வந்தேன் என்று நான் சும்மா எல்லாம் சொல்லவில்லை. அப்படிப்பட்ட உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் அளவிற்கு இந்த மாதிரி எல்லாம் நடந்தால் எப்படிப் பார்த்துவிட்டுச் சும்மா இருக்க முடியும்? மக்கள் எல்லாரும் ஊழலுக்குப் பழகிப் போய்விட்டார்கள் என்று நாம் கடந்து போய்விட முடியாது; ஏனென்றால், அது ஒரு நாள்பட்ட நோய் மாதிரி” என விஜய் குறிப்பிட்டார்.

“ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்தலாம் இல்லையா? அதற்கு முயற்சி எடுக்கலாம் இல்லையா? அப்படி நான் எடுத்த முயற்சியால்தான் இங்கே சில பேருக்கு பேஸ்மென்ட் எல்லாம் ஆடிப்போய் கிடக்கிறது. நம் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு எப்படிச் சும்மா இருக்க முடியும்? உங்கள் அண்ணன், உங்களை நல்ல வழியில் மட்டும்தான் கூட்டிக்கொண்டு போவான்” என்றும் முதலமைச்சர் விஜய் பேசினார்.