மாட்டிறைச்சி தட்டுப்பாடு... சிங்கம், புலிகளுக்கு ஆட்டிறைச்சி வழங்கும் அலிபூர் பூங்கா!

 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற அலிபூர் உயிரியல் பூங்காவில் மாட்டுக்கறி கிடைக்காததால், அங்குள்ள சிங்கம் மற்றும் புலிகளுக்கு ஆட்டிறைச்சி உணவாக வழங்கப்பட்டு வருகிறது.

அலிபூர் பூங்காவில் உள்ள சிங்கம், புலி உள்ளிட்ட மாமிச உண்ணிகளுக்குக் கொல்கத்தா மாநகராட்சி இறைச்சிக்கடைகளில் இருந்து வழக்கமாக மாட்டிறைச்சி வாங்கப்பட்டு வந்தது. தற்போது இறைச்சிக்கடைகளுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதில் அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாகப் பூங்காவிற்கு மாட்டிறைச்சி கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி கிலோ ரூ.270 முதல் ரூ.350 வரை விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக தற்போது கிலோ ரூ.700 முதல் ரூ.750 வரை விற்கப்படும் ஆட்டிறைச்சியை ஒப்பந்ததாரர்கள் வழங்கி வருகின்றனர். இதனால் பூங்கா நிர்வாகத்திற்கு நிதிச் சுமை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஆட்டிறைச்சியின் விலை மிக அதிகமாக இருப்பதால், விலங்குகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைவான அளவிலேயே உணவு வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.