7 பேரை கொன்று உடல்களை வீசிய டிரைவர்… ஆவிகளுக்கு பயந்து தூக்கமின்றி தவித்ததாக வாக்குமூலம்!

 

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், மனைவி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட கார் டிரைவர், கொலைக்குப் பிறகு அவர்களின் ஆவிகள் தன்னைத் துரத்துவதாக அச்சமடைந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூரு ராஜாஜிநகரைச் சேர்ந்தவர் இந்துசேகர் (52). குடும்பப் பிரச்சினை மற்றும் சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது மனைவி சுனிதா, மாமியார் ரூபவதி, மைத்துனர்கள் சிவக்குமார், சங்கர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 7 பேரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீசியதாகக் கூறப்படுகிறது. ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இந்துசேகர் மற்றும் அவரது 17 வயது மகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

போலீஸ் காவலில் இருந்தபோது வாக்குமூலம் அளித்த இந்துசேகர், கொலைக்குப் பிறகு உயிரிழந்தவர்கள் ஆவியாக வீட்டுக்கு வருவார்கள் என்ற பயத்தில் இரவில் தூங்க முடியாமல் தவித்ததாகக் கூறியுள்ளார். கோவில்களுக்குச் சென்று வழிபட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், 7 பேரைக் கொன்றதில் தனக்கு வருத்தம் இல்லை என்றும் அவர் கூறியதாகத் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது