பெங்களூருவில் பயங்கரம்... நிலத்தகராறை வீடியோ எடுத்த இளைஞர் சுட்டுக் கொலை!
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஹோஸ்கோட் அருகே நிலத் தகராறில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோஸ்கோட் தாலுகா சோலூர் பகுதியில் அரசு வீட்டு வசதித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்திற்குச் செல்லும் பாதையை ஜேசிபி இயந்திரம் மூலம் சமப்படுத்தும் பணி நடைபெற்றது.
அப்போது அப்பகுதியில் ராகி பயிரிட்டிருந்த ரமேஷ் முனியப்பா என்பவர், தனது பயிர்கள் சேதமடைந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து பணியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டிற்குள் சென்ற அவர், தனது உரிமம் பெற்ற இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்து வந்து ஜன்னல் வழியாகச் சுட்டுள்ளார்.
இதில் தகராறைச் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த 25 வயது இளைஞர் லிகித் கவுடாவின் வயிற்றில் குண்டு பாய்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், துப்பாக்கியைத் தடுக்க முயன்ற ஜேசிபி ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரமேஷ் முனியப்பாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.