திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற மணமகள்… லாரி விபத்தில் உயிரிழப்பு; கதறித் துடித்த தந்தை!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற மென்பொருள் பொறியாளர் தனது உறவுப் பெண்ணுடன் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தீபாஞ்சலிநகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மைசூரு சாலையில் கடந்த புதன்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. திருமண ஏற்பாடுகளில் இருந்த சிந்துஸ்ரீ (29), தனது உறவினரான வித்யா (19) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி, அவர்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. லாரியைப் பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
சிந்துஸ்ரீயின் திருமணச் சடங்குகள் தொடங்க வேண்டிய நாளில் இறுதிச் சடங்குகளுக்குத் தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது தந்தை நஞ்சுண்டப்பா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கனரக வாகனங்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தாததே விபத்துக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், விபத்து நடந்த நேரத்தில் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.