பெண்கள் விடுதியில் அத்துமீறல்: ஆந்திர வாலிபரைக் காலில் சுட்டுப் பிடித்த போலீசார்!
பெங்களூருவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர மாநில வாலிபரைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் மதனப்பள்ளியைச் சேர்ந்த 34 வயது நரேஷ் மீது கர்நாடகா மற்றும் ஆந்திராவில் திருட்டு, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் என 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எலகங்கா மற்றும் ஹுனசமரனஹள்ளி பகுதிகளில் உள்ள பெண்கள் விடுதிகளைக் குறிவைத்துச் செல்போன் பறிப்பு மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்த நரேஷ், சிக்கஜாலா பகுதியில் உள்ள விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் தகராறு செய்து செல்போனைப் பறித்துத் தப்பியுள்ளார். இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அவரைத் தேடி வந்தனர்.
ஹுனசமரனஹள்ளி அருகே பண்ணைக்குள் பதுங்க முயன்ற நரேசைப் பிடிக்க முயன்றபோது, போலீஸ் ஏட்டு சச்சினைக் கத்தியால் குத்தியுள்ளார். எச்சரித்தும் தாக்க முயன்றதால் இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா சுட்டதில் நரேசின் இடது காலில் குண்டு பாய்ந்தது; காயமடைந்த நரேஷ் மற்றும் போலீஸ் ஏட்டு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.