undefined

அரசியலில் அடுத்த அதிரடி - 'புரட்சி அதிமுக' கட்சியைத் தொடங்கினார் பெங்களூரு புகழேந்தி!

 

தமிழக அரசியல் களம் தினசரி புதிய மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும் செய்தித் தொடர்பாளருமான பெங்களூரு புகழேந்தி, இன்று தனது புதிய அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதிமுகவில் நீண்ட காலம் பணியாற்றியவர், பின்னர் சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது அணிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த புகழேந்தி, தற்போது 'புரட்சி அதிமுக' என்ற பெயரில் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

தனது கட்சியின் பெயரில் உள்ள 'புரட்சி' என்பது மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் (புரட்சித் தலைவர்) மற்றும் ஜெயலலிதா (புரட்சித் தலைவி) ஆகிய இருவரையும் குறிக்கும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். இது வெறும் அறிவிப்பு மட்டுமல்லாமல், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சி என்றும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தனிச் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சித் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார். "வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்தே காணாமல் போய்விடுவார்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏற்கனவே விஜய், மல்லை சத்யா மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் புதிய அரசியல் முன்னெடுப்புகளை எடுத்து வரும் நிலையில், புகழேந்தியின் இந்தப் புதிய கட்சித் தொடக்கம் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அதிமுக வாக்குகள் பலவாறாகப் பிரிவது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

பெங்களூரு புகழேந்தி ஓபிஎஸ் அணியில் இருந்தபோது அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர். என்பது குறிப்பிடத்தக்கது.