"லிவ்-இன் உறவில் கொடூரம்" - பெங்களூருவில் இளம்பெண் ரஞ்சிதா கழுத்தை நெரித்துக் கொலை!

 

பெங்களூரு வர்த்தூர் பகுதியில் லிவ்-இன் உறவில் இருந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்போது அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வர்த்தூர் பகுதியில், 23 வயது இளம்பெண் ரஞ்சிதா என்பவர் தனது லிவ்-இன் பார்ட்னரால் மின்கம்பியால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான ரஞ்சிதா மற்றும் அவரது காதலன் அய்யப்பா ஆகிய இருவரும் கடந்த சில காலங்களாக பெங்களூரு வர்த்தூர் பகுதியில் ஒரே வீட்டில் லிவ்-இன் முறையில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 12ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அய்யப்பா வீட்டில் இருந்த மின்சாரக் கம்பியால் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். கொலையைச் செய்த பிறகு, ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு அய்யப்பா தகவல் கொடுத்துள்ளார். ரஞ்சிதாவின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் அய்யப்பாவின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த ரஞ்சிதாவின் பெற்றோர், வர்த்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ரஞ்சிதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அய்யப்பாவைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ரஞ்சிதா கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ஆத்திரத்தில் மின்கம்பியால் ரஞ்சிதாவைக் கொன்றதை அய்யப்பா ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.