பெங்களூருவில் விநோத டிராபிக் ஜாம்! சாலையை தாண்டி அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளும் வாகன நெரிசல்... வைரல் வீடியோ!
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய சாலைகளில் மட்டுமே ஏற்படும் பிரச்சினை என்று நினைத்தால், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ அதற்கு வித்தியாசமான காட்சியை காட்டுகிறது. வர்த்தூர் பகுதியில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே நூற்றுக்கணக்கான கார்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.
கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில், அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து காரில் புறப்பட்டுள்ளனர். ஆனால் மெயின் ரோட்டுக்கு செல்வதற்கே சுமார் 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோவை குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் ஏராளமான கார்கள் நீண்ட வரிசையில் நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் அந்த பிரம்மாண்ட குடியிருப்பில் வாகனங்கள் வெளியேற குறிப்பிட்ட சில கேட்கள் மட்டுமே உள்ளன. வார இறுதி நாளில் ஒரே நேரத்தில் அதிகமானோர் வெளியேற முயன்ற நிலையில், வர்த்தூர்-ஒயிட்பீல்டு பிரதான சாலைகளில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் கேட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரதான சாலையில் இருந்த போக்குவரத்து நெரிசல் குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் பின்னோக்கி நீண்டுள்ளது. பெங்களூருவில் வேகமாக அதிகரித்து வரும் குடியிருப்புகள் மற்றும் அதற்கேற்ற போக்குவரத்து உள்கட்டமைப்பு குறித்தும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தற்போது குடியிருப்பு வளாகங்களுக்குள்ளேயே எதிரொலிக்கும் அளவுக்கு நிலைமை சென்றிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.