காதலுக்கு எதிர்ப்பு.. பெங்களூரு அருகே இளம்பெண் விபரீத முடிவு! 

 


கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை டவுன் பகுதியில், காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 19 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பாகல்கோட்டை பகுதியைச் சேர்ந்த பூமிகா (19), அங்குள்ள ஒரு டயர் கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் டோங்ரிசாப் என்ற வாலிபருக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்குப் பூமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் இல்லாத நேரத்தில் காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து பழகிய பூமிகாவை, அவரது பெற்றோர் கண்டித்ததோடு, இந்தக் காதலைக் கைவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

காதலனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் பூமிகா உறுதியாக இருந்துள்ளார். ஆனால், பெற்றோர் எதற்கும் சம்மதிக்காததால், தனது காதலனுடன் சேர முடியாது என்ற விரக்திக்கு அவர் தள்ளப்பட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பூமிகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டிற்கு வந்த பெற்றோர், மகள் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். தகவலறிந்து வந்த பாகல்கோட்டை போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால், சினேகா (044-24640050) அல்லது மாநில அரசின் உதவி எண் 104-ஐத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.