பெங்களூருவில் நடுங்க வைக்கும் கொடூரம்... நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா தத் என்ற 34 வயது பெண், அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலில் ரத்தக் கறைகளுடன் நிர்வாண நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டியிருந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கிருந்த காட்சிகள் அவர்களை உறைய வைத்தன. உயிரிழந்த பூஜாவின் உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டதால், அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டில் சிதறிக் கிடந்த தடயங்களைச் சேகரித்த போலீசார், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மர்ம நபர்கள் யாராவது வீட்டிற்குள் புகுந்து இந்தச் செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் தனியாக வசிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அந்தப் பெண் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.