நாளை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

 

சென்னை பெசன்ட்நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 54-ம் ஆண்டுப் பெருவிழா நாளை ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இவ்வாண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை மொத்தம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.

நாளை மாலை 4.30 மணிக்குக் கொடி பவனி தொடங்கி, மாலை 5.45 மணிக்குச் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றித் திருப்பலியைத் துவக்கி வைக்கிறார்.

ஆகஸ்ட் 30: நற்கருணைப் பெருவிழா. செப்டம்பர் 7: அன்னை மரியாவின் திருத்தேர் திருவிழா மற்றும் மாலை 5.30 மணிக்குத் தேர் பவனி. செப்டம்பர் 8: அன்னையின் பிறப்புப் பெருவிழா மற்றும் மாலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

'அமைதி' என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு திருவிழா நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னையின் முக்கியப் பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.