உஷார்... பானிபூரி சாப்பிட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதி... 18 குழந்தைகளுக்கும் பாதிப்பு!

 

தெருவோர உணவகங்களில் சாப்பிடுவது தவறு இல்லை என்றாலும், பல உணவகங்களில், உயர்தர உணவகங்களிலும் கூட சுகாதாரம் இல்லாமல் சமையல் செய்வது அதிகரித்து வருகிறது. பிரியாணியில் எலி, சாம்பாரில் கரப்பான் பூச்சி, ஷவர்மாவில் கெட்டுப்போன இறைச்சி என்று பொதுமக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டே பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என்று அலட்சியப் போக்கில் செயல்படுகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது கலனாகோர் பெடாரி கிராமம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாலையோர வியாபாரியிடம் பானிபூரி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரித்ததால் குழந்தைகள் உட்பட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 18 குழந்தைகள் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், தற்போது அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

அசுத்தமான தண்ணீர் அல்லது கெட்டுப்போன உணவுப் பொருட்கள் காரணமாக உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், ஆய்வகப் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே பாதிப்புக்கான உண்மையான காரணம் உறுதி செய்யப்படும். சுகாதாரத் துறையினர் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்