உஷார்... பிரசாதம் பெயரில் ‘மயக்க பால்கோவா’ - 27 சவரன் அபேஸ்... பெண் செய்த பகீர் காரியம்!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து, ‘கோயில் பிரசாதம்’ என நைசாகப் பேசி மயக்க மருந்து கலந்த பால்கோவாவைக் கொடுத்து நகைகளைத் திருடி வந்த பலே பெண் கொள்ளைக்காரியைப் போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திருவல்லிக்கேணி சின்னப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலத்திரி. மெக்கானிக்கான இவரது மனைவி சுஜாதா, வீட்டில் இருந்தபடியே தையல் வேலை செய்து வருகிறார். கடந்த 7-ம் தேதி மாலை மாலத்திரி வீட்டிற்கு வந்தபோது, சுஜாதா சுயநினைவின்றி மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றத்துடன் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பியபோதுதான், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
மயக்கம் தெளிந்த சுஜாதா கூறுகையில், "உங்களுக்குத் தெரிந்த பெண் என்று கூறி ஒரு பெண் வீட்டிற்கு வந்தார். கோயில் பிரசாதம் என்று கூறி பால்கோவாவைக் கொடுத்தார். அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே எனக்குத் தலை சுற்றியது, அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை" எனத் திகைப்புடன் தெரிவித்துள்ளார். அப்போதுதான் சுஜாதாவின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் சங்கிலி மாயமாகி இருப்பதைக் கண்டு கணவன் - மனைவி இருவரும் உறைந்து போயினர்.
இந்தச் சம்பவம் குறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பெண் அப்பகுதியில் நடமாடுவது தெரியவந்தது. தீவிர விசாரணையில், அந்தப் பெண் இதே பாணியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி மொத்தம் 27 சவரன் நகைகளைத் திருடியது அம்பலமானது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அந்தப் பெண்ணைப் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் ஏன் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டார் என்ற பகீர் காரணம் வெளியானது. அவர் ஆன்லைன் டிரேடிங் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டு, அதில் தனது சேமிப்புப் பணம் முழுவதையும் இழந்துள்ளார். இழந்த பணத்தை மீட்கவும், ஆடம்பர வாழ்க்கை வாழவும் குறுக்கு வழியைத் தேடிய அவர், தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து 'மயக்க பால்கோவா' கொடுத்து கொள்ளையடிக்கும் திட்டத்தைத் தீட்டியது தெரியவந்தது.
"அறிமுகமில்லாத நபர்கள் கொடுக்கும் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட வேண்டாம்" எனப் போலீசார் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், 'கோயில் பிரசாதம்' என்ற பெயரில் வரும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனச் சென்னை மாநகர காவல்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.