உஷார்... யாருக்கு ஓட்டு போட்டேன்னு சொன்னா 3 மாதம் ஜெயில் தண்டனை!
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. "வாக்கு என்பது ரகசியமானது" என்பதை உறுதிப்படுத்தும் வகையில், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிக்குள் சென்று நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குத் தெரியும் வகையில் சத்தமாகச் சொன்னாலோ அல்லது சைகை காட்டினாலோ அது குற்றமாகக் கருதப்படும். 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்குப்பதிவு ரகசியத்தை வேண்டுமென்றே பகிரங்கப்படுத்தும் நபர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போதைய 'செல்பி' மோகத்தால், இளைஞர்கள் பலர் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை மின்னணு இயந்திரத்துடன் சேர்த்துப் புகைப்படம் எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கைக் கொண்டுள்ளனர். இது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். வாக்குச்சாவடிக்குள் கேமரா, மொபைல் போன் கொண்டு செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறிப் புகைப்படம் எடுத்துப் பகிர்பவர்களின் வாக்கு ரத்து செய்யப்படுவதோடு, அவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்படும்.
"ஜனநாயகக் கடமையை ஆற்றும் அதே வேளையில், அதன் கண்ணியத்தையும் ரகசியத்தையும் காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. உங்கள் வாக்கை யாருக்குச் செலுத்தினீர்கள் என்பதை வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் ரகசியம் உங்கள் விரல் மையில் மட்டுமே இருக்கட்டும்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.