உஷார்... ரயில் நிலையத்தில் 3 சவரன் தாலிச் செயின் பறிப்பு - பர்தா அணிந்த 2 பெண்கள் கைது!
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண் பயணியிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிய இரண்டு பெண்களை ரயில்வே காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி ராமசாமி. இவர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்து, ஊருக்குச் செல்வதற்காக ரயிலின் பொதுப் பெட்டியில் ஏறியுள்ளார்.
ரயில் புறப்படத் தயாரான அந்த நேரத்தில், பெட்டியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பர்தா அணிந்திருந்த இரண்டு பெண்கள், பாப்பாத்தியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியைக் கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட மூதாட்டி சென்டிரல் ரயில்வே காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்தப் பதிவுகளை ஆராய்ந்தபோது, பர்தா அணிந்தபடி வந்த இரண்டு பெண்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் செயினைத் திருடியது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதி (70) மற்றும் பூஜா (28) ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் மிகுந்த ரயில் நிலையப் பகுதியில் அரங்கேறிய இந்தச் சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.