உஷார்... அடகுக் கடை நடத்தி 300 சவரன் தங்க நகைகள் மோசடி.. பெற்றோர் தலைமறைவு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடகுக் கடை நடத்தி 75 பேரிடம் சுமார் 300 பவுன் நகைகளை மோசடி செய்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வந்த சைலஸ் (52), அவரது மனைவி நிர்மலா (45) மற்றும் மகன் அகில் எஸ். விகானோ (27) ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அடகு வைத்த நகைகளைத் திருப்பச் சென்றபோது கடை பூட்டப்பட்டிருந்ததாகவும், கடை நடத்தியவர்கள் தலைமறைவானதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கோவையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த அகில் எஸ். விகானோவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் 75 பேரிடம் 300 பவுன் நகைகள் மோசடி செய்யப்பட்டது உறுதியானது. கைது செய்யப்பட்ட அகில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது பெற்றோரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.