உஷார்... எல்பிஜி சிலிண்டர் விதிகளில் இன்று முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்!

 

வீடுகளில் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் வணிக மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளில் மாற்றங்களைச் செய்துள்ளன. இதனால் சமையலறைச் பட்ஜெட்டில் நேரடித் தாக்கம் ஏற்படும்.

மானியம் தங்குதடையின்றி கிடைக்கச் செய்யவும், போலி இணைப்புகளை நீக்கவும் பயோமெட்ரிக் இ-கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளதால், சரிபார்ப்பை முடிக்காதவர்கள் அதிக விலையில் சிலிண்டர் வாங்க நேரிடலாம் அல்லது இணைப்பு தற்காலிகமாகத் தடைபடலாம்.

குழாய்வழி இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை விரைவுபடுத்த மத்திய அரசு புதிய ஊக்கத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் தூய்மையான எரிபொருள் பயன்பாடு விரிவுபடுத்தப்படவுள்ளது.

நுகர்வோர் ஒரே நேரத்தில் பிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருக்க அனுமதி இல்லை. பிஎன்ஜி இணைப்பு செயல்பாட்டிற்கு வந்த 30 நாட்களுக்குள் பழைய எல்பிஜி இணைப்பைச் சரண்டர் செய்ய வேண்டும்; தவறும் பட்சத்தில் எல்பிஜி இணைப்பு மற்றும் மானியம் தானாகவே முடக்கப்படும்.

கறுப்புச் சந்தை மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், அடுத்தடுத்த சிலிண்டர் முன்பதிவுகளுக்கான இடைவெளி கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி நகர்ப்புற வாடிக்கையாளர்கள் 25 நாட்களும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் 45 நாட்களும் இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.