உஷார்.. மக்கள் தொகை கணக்கெடுப்பில் தவறான தகவலளித்தால் ரூ.1,000 அபராதம்.... கேட்கப்படும் 33 கேள்விகளின் முழுமையான பட்டியல் விபரம்!

 

 

 

 

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளன. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த முறை கணக்கெடுப்புப் பணிகள் முழுமையாக மொபைல் செயலி மூலமாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளதாகத் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின் போது ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் வீட்டின் தரம், பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரத்தை மதிப்பிடும் வகையில் மொத்தம் 33 முக்கியக் கேள்விகள் கேட்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களைப் பற்றிய விபரங்களைச் சுயப் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தவறான அல்லது போலியான தகவல்களை அளிப்பது கண்டறியப்பட்டால், சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் புதிய உள்கட்டமைப்புகளைத் திட்டமிட உதவும் இக்கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 கேள்விகளின் முழுமையான விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

வீட்டின் கட்டமைப்பு மற்றும் இருப்பிடம் சார்ந்த கேள்விகள்

1. அடுக்குமாடி கட்டிட எண்: நீங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் அல்லது கட்டிடத்தின் அதிகாரப்பூர்வ எண்.

2. வீட்டு கதவு எண்: நகராட்சி அல்லது உள்ளூர் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உங்கள் வீட்டின் கதவு எண்.

3. வீட்டின் தரையின் முக்கியப் பொருள்: வீட்டின் தரைத்தளம் எதனால் அமைக்கப்பட்டுள்ளது (டைல்ஸ், சிமெண்ட், மொசைக் அல்லது ரெட் ஆக்சைடு).

4. வீட்டின் சுவரின் முக்கியப் பொருள்: வீட்டின் சுவர்கள் கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ள பிரதானப் பொருள் (செங்கல், கருங்கல், சிமெண்ட் ஹாலோ பிளாக்ஸ் அல்லது மண் சுவர்).

5. வீட்டின் மேல் கூரையின் முக்கியப் பொருள்: வீட்டின் கூரை எதனால் ஆனது (கான்கிரீட், ஓடுகள், உலோகத் தாள்கள், மரப்பலகை அல்லது வைக்கோல்).

6. வீட்டின் பயன்பாட்டு நிலை: வீடு தற்போது குடியிருப்புப் பயன்பாட்டில் உள்ளதா அல்லது பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தல்.

7. வீட்டின் அமைப்பு வகை: நீங்கள் வசிக்கும் வீடு தனி வீடா, டூப்ளக்ஸ் வீடா அல்லது அடுக்குமாடி குடியிருப்பா.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூக விபரங்கள்

8. குடும்ப எண்: அரசாங்கப் பதிவேடுகளின்படி உங்கள் குடும்பத்திற்கான பிரத்யேக அடையாள எண் (பொதுவாக ரேஷன் கார்டு/குடும்ப அட்டை எண்).

9. வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை: தற்போதைய நிலவரப்படி அந்த குறிப்பிட்ட வீட்டில் நிரந்தரமாக வசிக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை.

10. வீட்டுத் தலைவரின் பெயர்: அரசு ஆவணங்களின்படி உங்கள் குடும்பத்தின் தலைவராகக் குறிப்பிடப்பட்டுள்ள நபரின் முழுப் பெயர்.

11. குடும்பத் தலைவரின் பாலினம்: குடும்பத் தலைவர் ஆணா, பெண்ணா அல்லது மாற்றுத் திறனாளியா/திருநங்கையா என்ற விபரம்.

12. குடும்பத் தலைவரின் சமூக வகுப்பு (சாதிப் பிரிவு): குடும்பத் தலைவர் பட்டியல் சாதியினரா, பட்டியலிடப்பட்ட பழங்குடியினரா அல்லது இதர பிற பிரிவுகளைச் சேர்ந்தவரா என்ற சமூக வகைப்பாடு விபரம்.

வாழ்வாதார வசதிகள் மற்றும் உடைமை நிலை

13. வீட்டின் உரிமை நிலை: நீங்கள் வசிக்கும் வீடு உங்கள் சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்ற விபரம்.

14. குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை: உங்கள் வீட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த வசிக்கக்கூடிய அறைகளின் எண்ணிக்கை எத்தனை.

15. திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை: அந்த ஒரே கூரையின் கீழ் இணைந்து வாழும் திருமணமான தம்பதியரின் மொத்த எண்ணிக்கை.

16. குடிநீரின் முக்கிய ஆதாரம்: உங்கள் குடும்பத்திற்குத் தேவையான குடிநீர் எங்கிருந்து பெறப்படுகிறது (ஆறுகள், ஏரிகள், பொதுக் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு).

17. குடிநீர் வசதி கிடைக்கும் முறை: குடிநீர் உங்களுக்கு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது (நேரடிக் குழாய் இணைப்பு, லாரி தண்ணீர் அல்லது நிலத்தடி நீர்).

18. மின்சார வசதி நிலை: வீட்டின் விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரமாக மின்சார இணைப்பு உள்ளதா இல்லையா என்ற விபரம்.

சுகாதாரம் மற்றும் சமையல் எரிபொருள் வசதிகள்

19. கழிவறை வசதி: வீட்டிற்குள் அல்லது தனியாகக் கழிப்பிட வசதி உள்ளதா என்ற விபரம்.

20. கழிவறையின் வகை: பயன்பாட்டில் உள்ள கழிவறை எந்த அமைப்பைச் சார்ந்தது (காரை கழிவறை, பிளஷ் டைப் அல்லது இதர வகை).

21. கழிவுநீர் வெளியேறும் வசதி: கழிப்பறை மற்றும் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையான பாதாளச் சாக்கடை இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதா என்ற விபரம்.

22. குளியல் வசதி: வீட்டிற்குள் முறையான தனிக் குளியலறை வசதி இருக்கிறதா என்ற விபரம்.

23. சமையலறை மற்றும் எரிவாயு இணைப்பு: வீட்டிற்குத் தனிச் சமையலறை வசதி உள்ளதா மற்றும் எல்.பி.ஜி (LPG) அல்லது குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு உள்ளதா என்ற விபரம்.

24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்: சமையல் செய்யப் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள் எது (LPG, மின்சாரம், விறகு, கரி அல்லது வறட்டி/சாணம்).

மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு உடைமைகள்

25. ரேடியோ / டிரான்சிஸ்டர் வசதி: வீட்டில் வானொலி அல்லது டிரான்சிஸ்டர் சாதனம் பயன்பாட்டில் உள்ளதா.

26. தொலைக்காட்சி  வசதி: வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறதா என்ற விபரம்.

27. இணையதள வசதி: வீட்டில் உள்ள உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் பிராட்பேண்ட் அல்லது மொபைல் இன்டர்நெட் வசதி உள்ளதா.

28. மடிக்கணினி / கணினி வசதி: வீட்டில் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் சாதனங்கள் உள்ளதா.

29. தொலைபேசி / மொபைல் போன் வசதி: வீட்டில் லேண்ட்லைன் தொலைபேசி, சாதாரண மொபைல் அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாடு உள்ளதா.

போக்குவரத்து வாகனங்கள், உணவு மற்றும் தொடர்பு விபரங்கள்

30. இருசக்கர வாகன உடைமை: வீட்டில் சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் அல்லது மொபெட் போன்ற வாகனங்கள் உள்ளதா.

31. நான்கு சக்கர வாகன உடைமை: குடும்பப் பயன்பாட்டிற்குக் கார், ஜீப் அல்லது வேன் போன்ற வாகனங்கள் உள்ளதா.

32. பிரதான உணவு தானியம்: வீட்டில் அன்றாடம் உணவிற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய உணவுப் பொருள் எது (அரிசி, கோதுமை, மக்காச்சோளம் அல்லது சிறுதானியங்கள்).

33. மொபைல் எண்: மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் சரிபார்ப்பு மற்றும் எதிர்கால அரசுத் தகவல் தொடர்புகளுக்கு மட்டுமாகப் பயன்படுத்தப்படும் குடும்ப உறுப்பினரின் நடப்பு செல்போன் எண்.