உஷார்... உயிரைக் காக்கும் ஏர்பேக் எமனாக மாறிய கொடூரம்... காருக்குள் திடீரென ஏர்பேக் விரிந்ததில் இளைஞர் உயிரிழப்பு!
மும்பையில் பழைய கார் விற்பனைத் தொழில் செய்து வந்த இளைஞர் ஒருவர், விற்பனைக்காகக் காரைப் பரிசோதித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக காரின் பாதுகாப்பு ஏர்பேக் திடீரென விரிந்து, இளைஞரின் கழுத்தில் தாக்கியதில் காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த மோகித் சோனி என்ற இளைஞர், பழைய சொகுசு மற்றும் சாதாரணக் கார்களை வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வந்தார். இவர் தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக, சுமார் 15 ஆண்டுகள் பழமையான பழைய கார் ஒன்றை மும்பை மீரா - பயந்தர் சாலையில் உள்ள பிளசண்ட் பார்க் சொசைட்டி அருகே நிறுத்தியிருந்தார். காரின் தரம் மற்றும் இன்ஜின் செயல்பாடுகளை அறிவதற்காக அதன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அவர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.
மோகித் சோனி காரை ஸ்டார்ட் செய்து பரிசோதித்த அந்த நொடியில், காரில் இருந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து எதுவும் நடக்காத சூழலிலும் ஏர்பேக் திடீரென தானாக வெடித்துப் பலத்த சத்தத்துடன் வெளியேறி விரிந்துள்ளது.
வழக்கமாக விபத்துகளின் போது உயிரைக் காக்க மெத்தென்று விரிவடையும் ஏர்பேக், இங்குக் காரின் பழுது தன்மை மற்றும் நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இல்லாததால் சென்சார் கோளாறு காரணமாக அதிவேகமாக விரிந்து, அதே அழுத்தத்துடன் மோகித் சோனியின் கழுத்தின் வலது பக்கப் பகுதியில் பலமாகத் தாக்கியுள்ளது. இந்த எதிர்பாராத தாக்குதலால் அவரது கழுத்து எலும்பு மற்றும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, கடுமையான ரத்தக் காயங்களுடன் அவர் காருக்குள்ளேயே உடனடியாகச் சுயநினைவை இழந்து சாய்ந்தார்.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், காரின் உள்ளே இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மோகித் சோனி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் காவல்துறையினர், மோகித் சோனியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பயந்தரில் உள்ள பண்டிட் பீம்சென் ஜோஷி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
15 ஆண்டுகள் பழமையான கார் என்பதால் அதன் ஏர்பேக் வெடிக்கும் அமைப்பில் ஏதேனும் வேதியியல் குறைபாடு அல்லது துருப்பிடித்தல் காரணமாக இந்த விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உயிரைக் காக்கும் ஏர்பேக்கே ஒருவரின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.