உஷார்... வெடித்துச் சிதறிய புது செல்போன்.. வாலிபருக்குப் பலத்த தீக்காயம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக வாங்கிய செல்போன் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிபால்கா கிராமத்தைச் சேர்ந்த மஜித் என்பவர் புதிதாகச் செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். மஜித் வழக்கம்போல் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, அது எதிர்பாராதவிதமாகத் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் மஜித்தின் இரண்டு கைகளிலும், உடலின் கீழ்ப்பகுதியிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு அவர் வலியால் அலறியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த மஜித்தை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்துத் தகவல் எதுவும் உடனடியாகத் தெரியவரவில்லை.