உஷார்... மார்பிங் செய்த ஆபாசப் புகைப்படங்களைக் காட்டி இளம்பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி!
சமூக வலைதளப் பழக்கத்தைப் பயன்படுத்தி இளம்பெண்ணை ஏமாற்றிப் பணம் பறித்ததோடு, மார்பிங் புகைப்படங்களை வைத்து மிரட்டிய திண்டுக்கல் வாலிபரைச் சென்னை போலீசார் கம்பி எண்ண வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரைச் சேர்ந்த வினோத் (27) என்பவருக்கும், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணிற்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை ஒரு தொழில் அதிபர் போலக் காட்டிக்கொண்ட வினோத், தொழில் பரிவர்த்தனைக்காகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி அந்தப் பெண்ணிடமிருந்து சிறுகச் சிறுக சுமார் ரூ.13 லட்சம் வரை பெற்றுள்ளார். கொடுத்த பணத்தை அந்தப் பெண் திரும்பக் கேட்டபோது வினோத்தின் சுயரூபம் வெளிப்பட்டது.
அந்தப் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வைத்துக் கொண்ட வினோத், பணத்தைக் கேட்டால் இதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை நேரில் வரவழைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
வினோத்தின் டார்ச்சர் தாளாத அந்தப் பெண், சென்னை பரங்கிமலை காவல் நிலையத்தில் ஒரு கட்டத்தில் இது குறித்துப் புகார் அளித்தார். புகாரின் தீவிரத்தை உணர்ந்த போலீசார், தொழில்நுட்ப உதவியுடன் வினோத் இருக்குமிடத்தைக் கண்டறிந்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்த செல்போன் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணப் பரிமாற்றம் செய்வதையோ அல்லது தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிரவோ வேண்டாம் எனப் போலீசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.