உஷார்... இன்று  முதல் 10 நாட்களுக்கு நெல்லை அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை! ஆக.12 ஆடி அமாவாசை!

 

இன்று ஆகஸ்ட் 7ம் தேதி ம் உதல் 10 நாட்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தின் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் போது வனப்பகுதி மற்றும் அருவிப் பகுதிகளில் அதிகளவிலான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதால் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு பல பகுதிகளின் முக்கியக் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்தின் முதன்மைக் மூலமாகவும் விளங்குகிறது. மலைகளுக்கு நடுவே தவழ்ந்து வரும் இந்த ஆறு அகஸ்தியர் கோவில் அருகில் அழகிய அருவியாகக் கொட்டுவதுடன் ஆண்டு முழுவதும் நீர் வரத்தைப் பெற்றுள்ளது. பாபநாசம் காரையாறு அணையில் இருந்து சீராகத் தண்ணீர் திறந்து விடப்படுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எப்போதும் ஏமாற்றத்துடன் திரும்புவதில்லை.

ஆடி அமாவாசை திருவிழாவைக் காண ஏராளமான பக்தர்கள் இப்பகுதிக்கு வருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வனத்துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்காலிகமாக இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளனர். திருவிழா வெற்றிகரமாக முடிந்த பிறகு வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.