உஷார்.. இன்று முதல் 5 நாட்களுக்கு அனைத்து EPFO ஆன்லைன் சேவைகளும் முடக்கம்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது கணினி அமைப்பை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளதால், இன்று ஜூன் 26ம் தேதி முதல் வரும் ஜூன் 30-ம் தேதி வரை 5 நாட்களுக்கு அதன் அனைத்து ஆன்லைன் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
கணினி பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு மாற்றப் பணிகள் காரணமாகப் பின்வரும் முக்கிய இணையச் சேவைகள் முழுமையாகப் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஃப் சந்தாதாரர்களுக்கான உறுப்பினர் தளம் மற்றும் நிறுவனங்களுக்கான முதலாளி தளம் ஆகிய சேவைகளை அணுக முடியாது.
பிஎஃப் கணக்கில் இருந்து அவசரத் தேவைக்காகப் பணம் பெறும் விண்ணப்பங்கள், மாதாந்திர ECR தாக்கல் செய்தல் மற்றும் பிஎஃப் கணக்கு இருப்பை அறிந்துகொள்ளும் இ-பாஸ்புக் ஆகிய வசதிகள் தற்காலிகமாக முடங்கும். மத்திய அரசின் 'உமாங்' மொபைல் செயலி மூலமாகப் பெறப்பட்டு வந்த EPFO சேவைகளும் இந்த 5 நாட்களுக்குச் செயல்படாது.
ஆன்லைன் சேவைகள் முடக்கப்படும் இந்த இடைப்பட்ட நாட்களில், பிஎஃப் கணக்குத் தொடர்பாக ஏதேனும் அவசர உதவிகள் அல்லது சந்தேகங்கள் தேவைப்படும் பொதுமக்கள் 14470 என்ற EPFO-வின் அதிகாரப்பூர்வ அழைப்பு மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் தரவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிவேகமாக மாற்றவும் இந்த மேம்பாட்டுப் பணிகள் அவசியமாகிறது என்பதால், பொதுமக்கள் இந்தத் தற்காலிகச் சேவை முடக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அனைத்து ஆன்லைன் சேவைகளும் வழக்கம் போல் சீராக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.