உஷார்... லிப்ட் திறந்ததுமே பறிபோன உயிர்... உங்க அப்பார்ட்மெண்ட்ல பராமரிப்பு செக் பண்ணிக்கோங்க!
குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் நிகழ்ந்த இந்த கோரமான லிப்ட் விபத்து, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததே இந்த உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளின்படி, இந்த விபத்து நிகழ்ந்த விதம் பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ளது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த இளைஞர் லிப்ட் ஏறுவதற்காகக் கதவைத் திறந்துள்ளார். பொதுவாக லிப்ட் பெட்டி தரைத்தளத்திற்கு வந்தால் தான் கதவு திறக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பெட்டி வராமலேயே கதவு திறந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் வீடியோவைப் பகிர்ந்து, பழைய அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிப்ட்டுகளை முறையாகப் பராமரிக்காதது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
லிப்ட் பராமரிப்புப் பணியில் அலட்சியமாக இருந்த தனியார் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல இடங்களில் லிப்ட் கதவுகள் சரியாகச் செயல்படுகிறதா என்பதைச் சோதிக்காமலேயே இயக்கப்படுவது இத்தகைய விபத்துகளுக்குக் காரணமாகிறது.
லிப்ட் பயன்படுத்துவோருக்கான பாதுகாப்பு ஆலோசனைகள்
இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்: லிப்ட் கதவு திறந்தவுடனேயே கண்ணை மூடிக்கொண்டு உள்ளே நுழையாமல், லிப்ட் பெட்டி தரைக்கு இணையாக வந்துள்ளதா என்பதை ஒருமுறை உறுதி செய்த பின்பே கால் எடுத்து வைக்க வேண்டும்.
உங்கள் குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் வருடாந்திரப் பராமரிப்புச் சான்றிதழ் ஒட்டப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். லிப்ட்டிற்குள் சிக்கிக் கொண்டால் பதற்றமடையாமல் 'அலாரம்' அல்லது 'எமர்ஜென்ஸி' பொத்தானை அழுத்த வேண்டும்.