உஷார்... அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்கள் பொருத்திய பைக்குகள் பறிமுதல்!

 

 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் விதிகளுக்குப் புறம்பாக, பொதுமக்களுக்கும் முதியவர்களுக்கும் கடும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக இரைச்சல் மற்றும் அதிரவைக்கும் ஒலி எழுப்பக்கூடிய 'சைலன்சர்களை' பொருத்திப் பயணித்த பைக்குகளைப் போக்குவரத்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மாநகரின் முக்கியச் சாலைகளில் இளைஞர்கள் சிலர் தங்களது பைக்குகளில் சைலன்சர்களை மாற்றி அமைத்து காதுகளைப் பிளக்கும் வகையிலான ஒலியுடன் அதிவேகமாகப் பயணிப்பதாகப் போக்குவரத்து காவல் துறைக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து, தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் தலைமையில், சார்பு ஆய்வாளர் பாலன் மற்றும் போக்குவரத்து போலீஸார் அடங்கிய தனிப்படையினர் நேற்று மாலை தூத்துக்குடி நகரின் மிக முக்கிய மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்திப்புகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பொருத்தப்பட்டிருந்த சைலன்சர்களுடன் வந்த பைக்குகளை போலீசார் ஒவ்வொன்றாக மடக்கிப் பிடித்தனர்.

சோதனையில் சிக்கிய விதிமீறல் பைக்குகள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே போலீசாரால் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் டெசிபல் ஒலி எழுப்பிய வாகனங்களின் உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஸ்பாட் பைன் எனப்படும் உடனடி அபராதங்கள் விதிக்கப்பட்டன. மேலும், அந்தப் பைக்குகளில் இருந்து தடைசெய்யப்பட்ட மாற்று சைலன்சர்களை அகற்றி, நிறுவனத்தின் அசல் சைலன்சர்களைப் பொருத்திய பிறகே வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும் என போலீஸார் எச்சரித்தனர்.

மாநகரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை நிலைநாட்டுவதில் காவல் துறை தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்துத் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் வாகன ஓட்டிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில்,  "பொதுமக்களுக்கும், குறிப்பாகச் சாலைகளில் செல்லும் முதியவர்கள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பைக்குகளில் ஏர் ஹார்ன்கள் மற்றும் அதிக இரைச்சல் தரும் சைலன்சர்களைப் பொருத்துவது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதுடன், வாகனப் பதிவும் ரத்து செய்யப் பரிந்துரைக்கப்படும்" என்றார்.