உஷார்... 239 மருந்து, மாத்திரைகள் தரமற்றவை - மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை!
நாட்டில் விற்பனையாகும் மருந்துகளை ஆய்வு செய்ததில், காய்ச்சல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 239 மருந்து மாத்திரைகள் தரமற்றவை என்றும், ஒரு மருந்து போலியானது என்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மற்றும் மாத்திரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதனையின் முடிவில், மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் காய்ச்சல் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான 239 மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டுத் தரநிலைகளில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஆய்வில் ஒரு மருந்து முற்றிலும் போலியானது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தரமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ள மருந்துகளின் முழுமையான பட்டியல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் விவரங்களை அறிய, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் CDSCO அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.