உஷார்... உயிருக்கே ஆபத்து... 'வெப்பவாதத்திற்கு' பாராசிட்டமால் போடாதீங்க - சுகாதாரத்துறை எச்சரிக்கை!

 

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே சூரியன் தனது விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டான். நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாகப் பலருக்கு உடல் சோர்வு மற்றும் உடல் வெப்பம் அதிகரித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், உடல் சூட்டைச் சாதாரணக் காய்ச்சல் என்று தவறாகக் கருதி, மக்கள் தாங்களாகவே மருந்துக் கடைகளில் பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின்  போன்ற மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் எனச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாதாரணக் காய்ச்சலுக்கும், வெயிலினால் ஏற்படும் வெப்பவாதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வெப்பவாதத்தின் போது உடலின் வெப்பநிலையைச் சீராக்கும் மெக்கானிசம் செயலிழந்துவிடும். அந்த நேரத்தில் பாராசிட்டமால் போன்ற மருந்துகளை எடுப்பது ரத்த உறைதல் தொடர்பான சிக்கல்களை உருவாக்கி, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும். இது தற்காலிகமாக வெப்பத்தைக் குறைப்பது போல் தெரிந்தாலும், உட்புற உறுப்புகளுக்குத் தீராத சேதத்தை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் வெப்பம் அதிகமாக இருப்பது போல் உணர்ந்தால், உடனடியாக நிழலான இடத்திற்குச் செல்ல வேண்டும். குளிர்ந்த நீரால் உடலைத் துடைப்பது, தாராளமாகத் தண்ணீர் குடிப்பது போன்ற முதலுதவிகளைச் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் மருத்துவர் ஆலோசனையின்றி சுயமாக மாத்திரைகளை எடுக்கக் கூடாது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விஷயத்தில் அதிகக் கவனம் தேவை.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் குறையவில்லை என்றால் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகுவதே சிறந்தது.