உஷார்... தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - சுகாதாரத்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

 

பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரித்து வந்த டெங்கு பாதிப்பு, நடப்பாண்டில் தற்போதே 9,000யைக் கடந்துள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 23,407 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், இவர்களில் 12 பேர் உயிரிழந்ததாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வழக்கமான பருவக்காலத்திற்கு முன்பாகவே பாதிப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தீவிர காய்ச்சல் மற்றும் கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி மற்றும் உடல் சோர்வு, மூட்டு மற்றும் தசை வலி, வாந்தி மற்றும் தோலில் சிகப்பு தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தங்கு தடையின்றிச் சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் டெங்கு கண்காணிப்பு அறிக்கைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் காய்ச்சல் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கொசுக்களை அழிக்கும் பணியில் தினமும் 25,000-க்கும் மேற்பட்ட DBC பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாவதால், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய டயர்கள், தொட்டிகள் மற்றும் தேவையற்ற பாத்திரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

குடிநீர் தொட்டிகளை எப்போதும் மூடி வைக்க வேண்டும். ஏடிஸ் கொசுக்கள் பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை என்பதால், பகலில் தூங்கும்போது கட்டாயம் கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசுவலைகளைப் பொருத்துவதுடன், வெளியில் செல்லும்போது முழுக்கைச் சட்டைகளை அணிவது கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க உதவும்.