உஷார்.. வெளியே வராதீங்க... இன்று தொடங்கும் கத்திரி வெயில் மே 28 வரை நீடிக்கும்... 110 டிகிரி வெப்ப அலை வீசும்!
உஷார்... மக்களே... அவசியமில்லாமல் வீட்டை விட்டு மதிய நேரத்துல வெளியே வராதீங்க. குறிப்பாக பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் வெளியே சுற்றுவதைத் தவிர்த்திடுங்க.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் நீடித்து வரும் மே 28ம் தேதி வரையில் கத்திரி வெயில் நீடிக்கும்.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் சில இடங்களில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் மிக கடுமையாக கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த வெயில் காலத்தில் சுமார் 6 முறை கடுமையான வெப்ப அலைகள் வீசவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கோடை காலத்தின் உச்சபட்ச வெப்பம் இந்த கத்திரி வெயில் காலத்தில் தான் பதிவாகும் என்பதால் பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வெயிலின் உக்கிரமான தாக்கத்தால் உடலில் நீர்சத்து குறைந்து வெப்ப வாதம் எனப்படும் கடுமையான பாதிப்பு ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வெப்ப வாதத்தின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் இந்த கொடிய வெயில் காலத்தில் தங்களை முழுமையாக பாதுகாத்துக்கொள்ள மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பகலில் வெளியே செல்ல நேர்ந்தால் கண்டிப்பாக குடை பிடித்து செல்ல வேண்டும் என மருத்துவர்கள் பொதுமக்களுக்கு வலியுறுத்தி உள்ளனர்.
வெயிலில் அலையும் போது உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க அதிக அளவில் தண்ணீர் குடிப்பதுடன் இளநீர் மற்றும் தர்பூசணி போன்ற பழச்சாறுகளை பருக வேண்டும். மேலும் கோடை காலத்தில் உடல் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மிகவும் காரமான உணவு வகைகளை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.