உஷார்... இதைப் பண்ணாதீங்க... விசில் சின்னத்துக்கு வாக்களித்தவரைக் கைது செய்த அதிகாரிகள்.. ரீல்ஸ் எடுத்து அட்டகாசம்!
தேர்தல் ஆணையத்தின் கடும் எச்சரிக்கையையும் மீறி, வாக்குச்சாவடிக்குள் செல்போன் பயன்படுத்தி வீடியோ எடுத்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில், இன்று காலை வாக்களிக்கச் சென்ற தவெக தொண்டர் சக்திவேல், தான் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை ரகசியமாக வைக்காமல் வீடியோ எடுத்துள்ளார். தவெக-வின் 'விசில்' சின்னத்திற்கு அவர் வாக்களிப்பதை மிக நெருக்கமாக வீடியோ எடுத்து, அதனை உடனடியாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவேற்றியுள்ளார்.
வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்குப்பதிவு செய்யும் ரகசியத்தை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ எடுக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சக்திவேல் பதிவேற்றிய ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சக்திவேல் விதிமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாகச் செயல்பட்ட திருப்பத்தூர் போலீசார், சக்திவேலைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். அவர் மீது தேர்தல் விதிகளை மீறுதல் மற்றும் ரகசிய வாக்குப்பதிவு முறையைச் சீர்குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் ஆர்வக்கோளாறால் செல்போன் பயன்படுத்துவது மற்றும் வீடியோ எடுப்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் எனத் தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.