உஷார்... வாட்ஸ்அப், டெலிகிராமில் 'உத்தரவாதமான வருமானம்' மோசடியில் சிக்காதீங்க - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை... புகாரளிப்பது எப்படி?!
விரைவான, உறுதியான லாபம் கிடைக்கும் என்ற போலி வாக்குறுதிகளை அளித்து, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் இணையக் குற்றவாளிகள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளின் வழியே அதிகளவில் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இணையவழி முதலீட்டு மோசடிகளின் இந்த ஆபத்தான அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியக் குடிமக்கள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் புலனாய்வாளர்கள், இந்த மோசடிகள் எவ்வாறு அரங்கேற்றப்படுகின்றன என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இணையக் குற்றவாளிகள் முதலீட்டாளர்களைக் கவர்வதற்காக மிகவும் திட்டமிட்ட உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.
மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் போலி முதலீட்டுக் குழுக்களை உருவாக்கி, தங்களைப் பெரிய சந்தை நிபுணர்களாகவோ அல்லது புகழ்பெற்ற நிதி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளாகவோ காட்டிக் கொள்கின்றனர்.
"விஐபி பங்கு ஆலோசனைகள்" என்ற பெயரிலும், புனையப்பட்ட வர்த்தக வெற்றிக் கதைகளைக் காட்டியும், வழக்கத்திற்கு மாறான அதிக அல்லது உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்று கூறி பயனாளர்களை நம்ப வைக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபர்களை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களுக்குச் செல்ல விடாமல், தனிப்பட்ட இணைப்புகள் மூலமாகப் போலி வர்த்தகச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வற்புறுத்துகின்றனர். இது நேராக நிதி மோசடி மற்றும் தனிநபர் தரவு திருட்டிற்கு வழிவகுக்கிறது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அண்மையில் மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஒருவர் இந்த வலையில் சிக்கிப் பணத்தை இழந்த வழக்கை I4C பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட விஞ்ஞானி அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் குழு ஒன்றில் அனுமதியின்றி சேர்க்கப்பட்டார். அங்கு இருந்த போலி முதலீட்டு நிபுணர்கள் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறினர்.
அவர்களின் பேச்சை நம்பி, அதிகாரப்பூர்வமற்ற தனிப்பட்ட இணைப்பு மூலம் ஒரு போலி பங்கு வர்த்தகச் செயலியை அவர் பதிவிறக்கம் செய்தார். அந்தப் போலிச் செயலியில் இணையக் குற்றவாளிகள் அவரது கணக்கில் போலியான லாப எண்களைக் காண்பித்து, அவரைப் படிப்படியாகப் பெரிய தொகைகளை முதலீடு செய்யத் தூண்டினர். இறுதியில், அவர் தனது பணத்தை எடுக்க முயன்ற போது, அவரது கணக்கிற்கான அணுகல் முற்றிலும் முடக்கப்பட்டது. இதனால் அவர் முதலீடு செய்த அசல் நிதியைத் திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களுக்குப் போலி செயலியில் காட்டப்படும் லாபத் தொகையைத் திரும்பப் பெற முயற்சிக்கும் போது, மோசடிக்காரர்கள் தங்களது அடுத்த கட்ட தந்திரத்தைத் தொடங்குகின்றனர். கணக்கு முடக்கப்பட்டு விட்டதாகக் கூறி, அதை விடுவிக்க வரி செலுத்துதல், செயலாக்கக் கட்டணங்கள் அல்லது கணக்குச் சரிபார்ப்புக் கட்டணங்கள் என்ற பெயரில் மேலும் கூடுதல் தொகையைத் தங்களது கணக்கில் டெபாசிட் செய்யுமாறு வற்புறுத்துகின்றனர்.
உண்மையான பங்குத் தரகர்களோ அல்லது பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங்களோ, வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய நிதியைத் திரும்பப் பெறுவதற்காக, மேலும் கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று ஒருபோதும் வற்புறுத்துவதில்லை என்பதை அதிகாரிகள் திட்டவட்டமாக நினைவூட்டியுள்ளனர்.
இணையவழி நிதிக்குற்றங்களுக்கு எதிரான மிக வலிமையான பாதுகாப்பே பொதுமக்களின் விழிப்புணர்வுதான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும் எந்தவொரு முதலீட்டு ஆலோசனைகளையும் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
'உத்தரவாதமான வருமானம்' அல்லது 'பிரத்தியேக விஐபி வாய்ப்புகள்' என்ற வார்த்தைகளைக் கண்டாலே, அதை ஒரு முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நிதி சார்ந்த மற்றும் வர்த்தகச் செயலிகளை எப்போதும் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் எவ்வித தேவையற்ற இணைப்புகளையும் சொடுக்கக் கூடாது.
எந்தவொரு முதலீட்டைச் செய்வதற்கு முன்பும், சம்பந்தப்பட்ட தரகர்கள் மற்றும் வர்த்தகத் தளங்களின் நம்பகத்தன்மையைத் தாங்களாகவே உரிய ஆய்வுகள் மூலம் சரிபார்க்க வேண்டும்.
புகார்களைப் பதிவு செய்வது எப்படி?
ஒருவேளை யாரேனும் இது போன்ற இணைய மோசடிகளில் சிக்கிப் பணத்தை இழந்தாலோ அல்லது ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளைக் கண்டறிந்தாலோ, இழந்த நிதியை மீட்பதற்கும் குற்றவாளிகளைக் கண்டறிவதற்கும் உடனடியாகப் புகாரளிப்பது அவசியமாகும்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற தேசிய இணையக் குற்ற உதவி எண்ணை அழைத்துத் தொடர்பு கொள்ளலாம். மேலும், cybercrime.gov.in என்ற தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளம் மூலமாகவும் தங்களது புகார்களை ஆன்லைனில் விரைவாகப் பதிவு செய்யலாம்.
பொதுமக்கள் தங்களது குடும்பத்தினரும் நண்பர்களும் இது போன்ற இணைய மோசடி வலைகளில் விழுந்து தங்களது வாழ்நாள் சேமிப்பை இழக்காமல் தடுப்பதற்காக, இந்த எச்சரிக்கை ஆலோசனைகளை அவர்களிடமும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையப் பாதுகாப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.